அடக் கடவுளே!
நேத்து எந்த முகூர்த்த நேரத்தில் 'south is sizzling, politically' அப்படினு போஸ்ட் போட்டேனோ தெரியல. 'நாங்க இங்க செய்யற கலாட்டாவெல்லாம் உன் கண்ணுக்கு political sizzling-காத் தெரியலியா'னு கல்கத்தாவும் புத்ததேவ் பட்டாச்சார்ஜியும் ஒரு சேரக் கோபித்துக் கொண்டு விட்டனர் போலும்.
காலையில நாலு மணிக்கு எழுந்து நடுங்கும் குளிரில் க்கக்கக்குளித்துக் கிளம்பி 'ரஜினி பட முதல் நாள் ஷோ' போன்ற கூட்டத்தையும் மெட்டல் டிடெக்டர் தடவலையும் சகித்துக் கொண்டு 'மாஸ்க் போட்டு எப்படி மூச்சு விடுவது'லேர்ந்து ஆரம்பித்து பக்கத்து இருக்கைக்காரர் முழங்கையை இடித்துக் கொண்டே எப்படி பேப்பர் படிப்பது, எப்படி இட்லி சாப்பிடுவது போன்ற நடை முறை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான எல்லா பயிற்சிகளையும் முடித்து ஒன்பதரைக்கு கொல்கத்தாவில் கால் வைத்த போது கூட உள்மனதில் எதுவும் தப்பாக நடக்கப் போவதாக உறுத்தவில்லை.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ' லெவல் டூ' ட்ரெயினிங்காகப் பிரித்துப் பூட்டிய பெயிண்ட் போன அம்பாசிடர் காரில் நாராயன் கார்த்திகேயனை முந்துவது எப்படி என்று ப்ராக்டிகல் நடக்க, இடையில் பல ஹோண்டா சிட்டிக்களயும், பல மஞ்சள் பொட்டி பஸ்களையும் இடிப்பது போல் சென்று ஏகப் பட்ட பழி பாவங்களையும் சம்பாதித்துக் கொண்டு ( டிரைவர் செய்யும் பாவங்கள் அவர் வண்டியில் பயணம் செய்பவரையும் பாதிக்குமா? அப்படின்னா நான் மகா பாவியாகிவிட்டேனா? ) பார்க் ஸ்ட்ரீட்ல ஆபீஸ் உள்ளே போனவன் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஏதோ மன் மோகன் சிங் போல நினத்துக் கொண்டு பிஸியாகி விட, பதினொன்றரை மணிக்கு அந்த நாலாவது மாடி கான்பெரென்ஸ் ரூம் கறுப்பு ஜன்னல் வழியா வெளியே பார்த்த போது பயங்கர ஷாக்!
நார்மலா அந்த உயரத்திலேர்ந்து கீழே பார்த்தால் மஞ்சளும் வெள்ளையும் மட்டும் தான் தெரியும். அது தாங்க, மஞ்சள் அம்பாசிடரும், வெள்ளை அம்பாசிடரும்! ஆனால் இப்போதோ மஞ்சள் கோடும் வெள்ளைக் கோடுமாய் பார்க் ஸ்ட்ரீட் கழுவி வைத்த கோயில் பிரகாரம் போலப் பளிச்செனத் தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் காலையிலேர்ந்து பத்தாவது முறையாக கேண்டீன் சென்று வந்த ஒரு உழைப்பாளி நண்பர் தவறுதலாக காண்பரன்ஸ் ரூம் உள்ளே நுழைந்து, ஏதாவது வேலை சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் சற்றே உறைந்து, உடனே சுதாரித்துக் கொண்டு, பதற்றத்தில் பத்த வச்ச லஷ்மி வெடி - 'பக்கத்து லேன்ல நாலு அம்பாசிடர் பத்திக் கிட்டு எரியுது'
விஷயம் என்னவென்றால் தஸ்லிமா நஸ்ரினுக்கு விஸா பீரியட் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து சிலர் ஊர்வலமா கிளம்பி கொடும் பாவி எரித்தல், கோஷமிடுதல் போன்ற சராசரி இந்தியனுக்கான டே-டுடே ஹாபியில் ஈடுபட, போலீஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை எறிய, இன்னுமொரு யூசுவல் கொல்கத்தா காலை வைபோகம் ஆரம்பித்திருந்தது. சுமார் இரு நூறு பேரை அடக்க முடியாமல் ஒரு மாநில அரசு இந்திய ராணுவத்தின் உதவி தேவை என பிரகடனம் செய்து உடனடியாக ராணுவம் மற்றும் rapid action force உடன் flag march-ம் செய்ய வைத்தது தான் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இதில் காமெடி என்னவென்றால் நந்திக்ராமில் நடக்கும் அக்கிரமங்களை அடக்கு என்றவர்களிடம் 'அப்படியென்ன பெரிதாக நடந்து விட்டது, கற்பழிப்பு, கொலை மற்றும் சில சிறுமிகள் காணாமல் போனது போல சின்ன சின்ன விஷயங்கள் தானே, இது எங்கள் உள் விவகாரப் பிரச்சினை, வேறு யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏளனம் செய்த அதே மாநில அரசு தான் இன்று ஒரு சிறிய கூட்டத்தை அடக்க இந்திய ராணுவத்தைப் பயன் படுத்தியுள்ளது.
இங்கு சில பெங்காளி நண்பர்கள் விவரித்த அரசியல் விளையாட்டுக்களைக் கேட்கக் கேட்க ஐந்து வயதில் விட்டலாச்சார்யா படத்தில் பார்த்துப் பயந்த பேயை விட இன்றைய அரசியல் பேய் தான் பயங்கர ரூபத்துடன் இருப்பது போலத் தோன்றியது. கலி காலமே தான், சந்தேகமேயில்லை. 'கலக்கப் போவது யாரு'னு கேட்டீங்கன்னா கண்டிப்பா இப்போதைக்கு வெஸ்ட் பெங்கால் அரசாங்கம் தான் என்று தயங்காமல் எஸ் எம் எஸ் எல்லாம் எண்ணாமலே ரிசல்ட் சொல்லி விடலாம்.
இதெல்லாம் சரி தான், நாளை 'மீண்டும் காலையில நாலு மணிக்கு எழுந்து நடுங்கும் குளிரில் க்கக்கக்குளித்துக் கிளம்பி 'ரஜினி பட முதல் நாள் ஷோ' போன்ற கூட்டத்தையும் மெட்டல் டிடெக்டர் தடவலையும் சகித்துக் கொண்டு' என படலம் உள்ளதே, எப்படி சாத்தியம் என்று விழி பிதுங்க கலக்கத்துடன் TV முன் அமர்ந்து இதை எழுதிக் கொண்டுள்ளேன். இன்று இரவு பத்து மணியிலிருந்து நாளைக் காலை ஆறு மணி வரை curfew போட்டுள்ளார்கள்.
அடக் கடவுளே!
2 comments:
Still its a lovely place to enjoy when you have friends out ther. Do check out Esplanade, Lake Market and park avenue for good exclusive hotels. If u like Dabba, chk Ultadanga.
Hey I have changed my urls and do check my profile.
I was totally out of web for quite a few days...sorry.
Sure will check out right away.
Thanks.
Post a Comment